

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், கோட்டைமேடு பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அய்யனார் கோவில் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில் கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாப்பாஞ்சாவடி பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 23), தங்கமணி (24), கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகம்மது (25), சின்னகோட்டக்குப்பம் ரஹ்மான் (20), கருவடிக்குப்பத்தை சேர்ந்த சரத்ராஜ் (20) என்பதும், இவர்கள் 5 பேரும் சேர்ந்து கோட்டக்குப்பம் பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சாமுவேல் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.