

சென்னை:
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பக்தாராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து அவர்களை அழைத்து வந்து புழல் சிறையில் தமிழக போலீசார் அடைத்தனர்.
அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 30-ந்தேதி முதல் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 1¾ கிலோ நகைகளை சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் தெருவில் உள்ள நகை கடையில் விற்று பணத்தை வாங்கியதாகவும் மேலும் பெங்களூருவில் ஒரு கிலோ நகைகளை அங்குள்ள நகை அடகு கடையில் விற்று பணம் பெற்றதாகவும் நாதுராமும் அவனுடைய கூட்டாளிகளும் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் என்.எஸ்.சி. போஸ் தெருவில் நகை அடகு கடையில் விற்றதாக சொன்ன இடத்திற்கு சென்று 1½ கிலோ நகைகளை போலீசார் மீட்டனர்.
அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள அடகு கடையில் உள்ள நகைகளை மீட்க நாதுராமையும் கூட்டாளிகளையும் போலீசார் பெங்களூர் அழைத்து சென்றனர். அங்கு முகாமிட்டுள்ள சென்னை போலீசார் நகை வாங்கிய அடகு கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பெங்களூர் அடகு கடை அதிபர் போலீசில் சிக்கியுள்ளார். அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். பெங்களூர் நகை வியாபாரியிடம் விசாரணை நடத்தினால் இந்த வழக்கில் பல தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews