

ராயபுரம்:
சென்னை கொடுங்கையூர் சிட்கோநகர் 2-வது பிரதான சாலையில் 100-க்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்களின் தொழிற்சாலைகள், குடோன்கள் உள்ளன.
நள்ளிரவு 2 மணி அளவில் இங்கு விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கும் பரவியது.
இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
வடக்கு மண்டல இணை இயக்குனர் ரவீந்திரன் தலைமையில் வியாசர்பாடி, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர்.
20-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தீயணைக்கும் பணி விறு விறுப்பாக நடந்தது. ஆனாலும் வணிக வளாகத்தில் இருந்த விக்னேஷின் தொழிற்சாலை, வர்த்தமான் என்பவரது மெட்டல் கம்பெனி மற்றும் சசிகுமாரின் திருமண பொருட்கள் குடோன் மற்றுமொரு பர்னிச்சர் நிறுவனம் ஆகியவற்றில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்தில் ரூ.1 கோடி அளவிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
புகை மண்டலம் காரணமாக அப்பகுதி மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.