

தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை அடுத்த அல்லிகொண்டா பட்டு பகுதியை சேர்ந்தவர் தனிச்சநாத் (வயது 52) விவசாயி. இவரது மகள் அமலாஜெனிபர் (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த லோயல்ராஜ் (25) என்பவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 4 வருடங்களாக ஒன்றாக ஆசிரியராக வேலை பார்த்து வந்தனர்.
அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பள்ளி கோடை விடுமுறையையொட்டி இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். சொந்த ஊரில் இவர்கள் நேரில் சந்திக்க முடியாததால் அடிக்கடி போனில் பேசி வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததால் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை அமலா ஜெனிபரை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். இதையறிந்த காதலன் லோயல்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அமுல், தினேஷ், சரவணன் ஆகியோர் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அமலாஜெனிபரை கடத்தி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தனிச்சநாத் தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் தனது மகளை லோயல்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் வீடு புகுந்து கடத்தி சென்றதாக புகார் அளித்தார்.
தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து லோயல்ராஜ் உள்ளிட்ட 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.