

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரில் உள்ள ராஷ்டரிய சுவயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தலைமை அலுவலகத்தில் இன்று விஜயதசமி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், குறுகியகால அரசியல் ஆதாயத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவு அளித்துவரும் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநில அரசுகளை குற்றம்சாட்டினார்.
மும்பையில் நேற்று ரெயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 22 பேர் பலியான சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த மோகன் பகவத், தேசிய நீரோடையில் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், டோக்லாம் விவகாரத்தில் சீனாவை மத்திய அரசு கையாண்ட விதத்தை வெகுவாக பாராட்டினார்.
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது மியான்மரில் இருந்து ரோஹிங்கியா மக்களும் நமது நாட்டுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறார்கள்.
மியான்மரில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஏராளமான ரோஹிங்கியாக்கள் நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி விட்டனர். மேலும் அதிகமாக ஊடுருவ தயாராக உள்ளனர். இவர்கள் எல்லாம் பிரிவினைவாதம், தீவிரவாதம், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருத்தல் போன்ற கிரிமினல் நடவடிக்கைக்காக மியான்மரில் இருந்து விரட்டப்பட்டவர்கள்.
ரோஹிங்கியாக்களுக்கு இங்கு அடைக்கலம் அளிப்பது நமது வேலைவாய்ப்பை பறிப்பதுடன், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.