கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்- உயிரைக் காப்பாற்ற போராடும் டாக்டர்கள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi #KauveryHospital #KarunanidhiHealth
கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்- உயிரைக் காப்பாற்ற போராடும் டாக்டர்கள்
Published on

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கழுத்தில் துளையிடப்பட்டு ‘‘டிரக்யாஸ்டமி’’ எனும் கருவி பொருத்தப்பட்டது.

கடந்த சுமார் 20 மாதங்களாக அவர் அந்த செயற்கை கருவி மூலம் சுவாசித்து வருகிறார்.

கடந்த மாதம் 18-ந்தேதி கருணாநிதிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் டிரக்யாஸ்டமி குழாய் கருவியை மாற்றி விட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டது. அன்றே அவர் வீடு திரும்பினார். சுமார் ஒரு வாரம் இயல்பு நிலையில் இருந்த கருணாநிதிக்கு ஜூலை 26-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

அதுவரை நன்றாக இருந்த கருணாநிதி வயது முதிர்வு காரணமாக முதன் முதலாக உடல் நலிவை சந்தித்தார். காவேரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு வீட்டுக்கு சென்று 2 நாட்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் கருணாநிதி உடல் நலத்தில் ஏற்பட்ட பின்னடைவை தடுக்க இயலவில்லை.

28-ந்தேதி கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிரவு அவர் மூச்சுவிட திணறியதால் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த அழுத்த குறைவு சீராக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் 30 நிமிடம் உட்கார வைக்கும் அளவுக்கு முன்னேற்றம் இருந்தது. இதனால் 3 நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதி கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. இதற்கிடையே பிளட்டேட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களும் குறைந்தது. நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி செய்வதே இந்த ரத்த தட்டணுக்கள்தான்.

கல்லீரல் பாதிப்பு, சிறுநீர் பாதை தொற்று, மஞ்சள் காமாலை, ரத்த தட்டணுக்கள் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை கருணாநிதியின் நாடித்துடிப்பிலும் தொய்வு ஏற்பட்டது. இதனால் கருணாநிதி உடல்நிலை நேற்று மதியம் கவலைக்கிடமாக மாறியது.

கருணாநிதி உடல் நிலை மோசமானதால் அவரது குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மதியம் 1.45 மணிக்கு தயாளு அம்மாள் வந்தார். கருணாநிதியைப் பார்த்து அவர் கண்ணீர் வடித்தார். நேற்று பிற்பகல் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

இதனால் காவேரி ஆஸ்பத்திரி வளாகம் நேற்று மாலை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க ‘‘தலைவா எழுந்து வா’’ என்று கோ‌ஷமிட்டனர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவாலாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மருத்துவ அறிக்கை காரணமாக தி.மு.க.வினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். மக்கள் மத்தியிலும் நேற்று மாலை முதல் பரபரப்பான மனநிலை காணப்படுகிறது. அனைவரது பார்வையும் காவேரி மருத்துவமனையை நோக்கியே திரும்பியுள்ளது.

மருந்துகள் அனைத்தும் ரத்த தட்டணுக்கள் அளவு குறைவு காரணமாக மெதுவாகவே பலன் அளிக்கின்றன. இதன் காரணமாக கருணாநிதி உடல் நிலை இன்றும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த டாக்டர்கள் குழு கடுமையாக போராடி வருகிறது.

கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உலக அளவில் புகழ் பெற்ற டாக்டர் முகம்மது ரேலே வழங்கியுள்ள ஆலோசனையின் பேரில் கருணாநிதிக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அந்த சிகிச்சையை கருணாநிதி உடல் ஏற்றக்கொண்டதா என்பது இன்று பிற்பகலில் தான் தெரியும். அதற்கு ஏற்ப கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய அடுத்தக்கட்ட சிகிச்சை பற்றி முடிவு செய்ய டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எனவே கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட உள்ள 7-வது அறிக்கை மூலம் தெரியவரும். அதை தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பதட்டமான மனநிலையுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

தொண்டர்கள் அனைவரும், கருணாநிதி இந்த சவாலிலும் வென்று உடல் நலம் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com