

புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆய்வுநூல் அறிமுக விழா மறைமலையடிகள் சாலையில் உள்ள சாய்ராம் ஓட்டலில் நடந்தது. மாநில இலக்கிய அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். தலைவர் ராஜா, துணை அமைப்பாளர் ராஜேந்திரன், பொருளாளர் கலிவரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுவை தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விழாவிற்கு தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலைஞரின் இலக்கியப்பணி ஆய்வு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் கலைஞனும் இல்லை. இலக்கியவாதியும் இல்லை. தமிழ் மீது பற்று மிக்க தமிழன். முழுநேர அரசியல்வாதியாக இருந்து வருவதால் இலக்கியத்தின் மீது முழு ஈடுபாடு கொள்ளவில்லை. ஆனால், புதுவையில் உள்ள இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் பணி இம்மாநிலத்திற்கு பெருமை சேர்க்கிறது.
தலைவர் கலைஞர் இலக்கியவாதியாக, எழுத்தாளராக, கவிஞராக, திரைக்கதை வசனகர்த்தா என இன்றைய இளம் தலைமுறையினரும் ஏற்றுக் கொள்கின்ற பண்முகம் கொண்டவராக திகழ்கிறார். தமிழுக்காக தமது வாழ்வை அர்பணித்தவர் கலைஞர். தமிழ்பாடிய கவிஞர்களை பாராட்டக் கூடிய பண்பாளர்.
நான் கலைஞரை 3 மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். அப்படி பேசும்போதெல்லாம் ஒரு அரசியல்வாதி ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து எப்படி வழிநடத்துகிறார் என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவேன். மக்கள் சேவையை மகேசன் சேவையாக கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞரை நான் மானசீக தலைவராக ஏற்றுள்ளேன்.
நான் எம்.பி.,யாக இருந்த போது அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் செயலாளராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டேன். அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி. தலைவர் கலைஞர் எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.
நான் கட்சி செயலாளர் பதவி பெற்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, கோபாலபுரத்தில் உள்ள தலைவர் கலைஞரை சந்தித்து வாழ்த்து பெற சென்றேன்.
அப்போது என்னை வாழ்த்திய கலைஞர் உயர்ந்த வகுப்பினருக்கு கொடுக்கப்பட்டு வந்த அகில இந்திய செயலாளர் பதவியை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த உங்களுக்கு கொடுத்துள்ளார்கள். அதனை நீங்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று வாழ்த்தினார்.
கடந்த வாரம் கலைஞரை நானும் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணனும் சந்தித்தோம். எங்களை பார்த்தவுடன் புன்னகையுடன் வர வேற்றார். பேச முடியாமல் அவதிப்படும் கலைஞரை தொந்தரவு செய்யக்கூடாது என்று உடனிருந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கூறி விட்டு நாங்கள் புறப்பட தயாரானோம்.
அப்போது கையை அசைத்து எங்களை உட்கார சொல்லி எங்களிடம் ஏதோ பேச முயற்சித்தார் கலைஞர். அவர் எங்களிடம் இந்த நிலையிலும் பேச நினைத்ததே எங்களை அங்கீகரித்த பெருமையாக கருதுகிறோம். விரைவில் அவர் குணம்பெற்று கட்சியை வழிநடத்துவார்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
தி.மு.க. தலைவர் இலக்கிய அணி செயலாளர்கள் தஞ்சை கூத்தரசன், கவிதைப் பித்தன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சபாபதி மோகன் ஆகியோர் நூலை அறிமுகம் செய்து வாழ்த்தி பேசினர். நூல் ஆசிரியர் கந்தன் நூல் ஏற்புரை ஆற்றினார்.
இந்த விழாவில், முன்னாள் முதல்- அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன், முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, தமிழ் சங்கத் தலைவர் முனைவர் முத்து, அவைத்தலைவர் சீத்தா. வேதநாயகம், துணை அமைப்பாளர்கள் குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.