கருமத்தம்பட்டி அருகே விசைத்தறி குடோனில் தீ விபத்து

கருமத்தம்பட்டி அருகே விசைத்தறி குடோனில் தீ விபத்தில் காடா துணி, நூல் எரிந்து நாசமானது. அதிகாலையில் நடந்த தீ விபத்து கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருமத்தம்பட்டி அருகே விசைத்தறி குடோனில் தீ விபத்து
Published on

கோவை:

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாபு (வயது 45). விசைத்தறி அதிபர். இவர் அந்த பகுதியை சேர்ந்த கணபதியப்பன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஒரு பகுதியில் விசைத்தறி கூடமும், மற்றொரு பகுதியில் துணி வைக்கும் குடோனாகவும் பயன்படுத்தி வருகிறார்.

பொங்கல் பண்டிகையையொட்டி விசைத்தறி கூடத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பாபு விசைத்தறி கூடத்தை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் விசைத்தறி குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி விசைத்தறி குடோனில் வைக்கப்பட்டு இருந்த காடா துணிகள் மற்றும் நூல் ஆகியவற்றில் பற்றி எரிந்தது.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பொது மக்கள், விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுபடுத்த முடியாமல் தொடர்ந்து எரிந்தது.

உடனடியாக இது குறித்து கோவை மற்றும் அன்னூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

பின்னர் குடோனில் தீ பிடிக்காமல் இருந்த காடா துணிகள்,நூல்கள் ஆகியவற்றை குடோனில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிகாலையில் நடந்த தீ விபத்து கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com