கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் சம்மன்

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தன்னை வந்து சந்திக்கும்படி சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பி உள்ளார்.
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்
Published on

பெங்களூரு:

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர். இவர்களில் 12 பேர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

மேலும், மந்திரியாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். ஆனால் அந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் சபாநாயகர் ரமேஷ் குமார் தீவிரம் காட்டி உள்ளார். இதற்காக அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு தனது அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி சம்மன் அனுப்பி உள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி கூட்டணி தலைவர்கள் மனு அளித்துள்ளனர். அதற்கு விளக்கம் கேட்கும்வகையில், இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி சுயேட்சை எம்எல்ஏக்கள் 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அவசரமாக விசாரிக்கும்படி கோரினர். ஆனால், அவசரமாக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், நாளை பார்க்கலாம் என கூறி உள்ளது. இதனால், கர்நாடக சட்டசபையில் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது கேள்விக்குறிதான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com