சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு இறுதி விசாரணையில் கர்நாடக அரசின் வாதங்கள் நிறைவு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவரும் வழக்கின் இறுதி விசாரணையின் 8-வது நாளான நேற்று கர்நாடக அரசின் வாதங்கள் நிறைவடைந்தன.
சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு இறுதி விசாரணையில் கர்நாடக அரசின் வாதங்கள் நிறைவு
Published on

புதுடெல்லி:

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்துவருகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று 8-வது நாளாக விசாரணை தொடர்ந்தது.

இதுவரை கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், எஸ்.எஸ்.ஜாவளி, மோகன் கர்த்தார்க்கி, ஷியாம் திவான் ஆகியோர் வாதாடினர். கர்நாடக அரசு மூத்த வக்கீல் ஷியாம் திவான் நேற்று தொடர்ந்து வாதாடியபோது கூறியதாவது:-

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1924-ம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இருந்தே தமிழகத்தின் நலன் மட்டுமே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. கர்நாடக விவசாயிகளின் நலன்கள் எப்போதும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்துள்ளன. தமிழ்நாட்டின் சாகுபடி முறைகள் அதிக தண்ணீர் பயன்பாட்டை கோருபவை. ஒரு ஆண்டில் இரு சாகுபடி தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்கு பெயர் வைத்துள்ளார்கள். கர்நாடகாவில் அப்படி செய்யப்படவில்லை. கர்நாடகா நீர்ப்பாசன முறைகளை மேம்படுத்தி மேலும் அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்திருந்தால் நடுவர் மன்றம் அதற்கு தகுந்தாற்போல தண்ணீரை ஒதுக்கீடு செய்திருக்குமே என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஷியாம் திவான், கர்நாடகாவில் ஏற்றப்பாசனம் மிகச்சிறிய அளவில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வாய்க்கால் வழியாக பாசனம் செய்கிறார்கள். அங்கு ஏற்றப்பாசனம் கிடையாது. இந்த விஷயத்தை காவிரி நடுவர் மன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. கர்நாடகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து நடுவர் மன்றம் கணக்கில் எடுக்கவில்லை.

தமிழகத்துக்கு தேவைக்கு அதிகமாக ஒதுக்கினார்கள். காவிரி நடுவர் மன்ற விசாரணையின்போது அவர்கள் தரப்பில் ஒரு அதிகாரி தமிழ்நாட்டுக்கு 41.89 டி.எம்.சி. இருந்தால் போதுமானது என்று சாட்சியளித்திருக்கிறார் என்றார்.

இதற்கு தமிழ்நாடு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே குறுக்கிட்டு, கர்நாடகா தரப்பில் கடலின் மேற்பரப்பில் தெரியும் பனிக்கட்டியின் நுனியை மட்டுமே உங்களுக்கு காண்பித்து வருகிறார்கள். எங்கள் தரப்பு வாதங்களின்போது அந்த பனிக்கட்டியின் அடியாழ நுனி வரை இந்த நீதிமன்றத்தில் காட்டுகிறேன் என்றார்.

தொடர்ந்து ஷியாம் திவான், கர்நாடக மாநிலம் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாரபட்சத்துடன் நடத்தப்பட்டு வருவதால் சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகாவுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கூறி தன்னுடைய வாதத்தை முடித்துக்கொண்டார்.

பிறகு கர்நாடகா தரப்பு மூத்த வக்கீல் பாலி நாரிமன் தன்னுடைய வாதத்தின் இறுதிப்பகுதியை தொடங்கினார். அவர் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

தண்ணீரை தேவைக்கேற்ப சமன்பாட்டுடன் பகிர்ந்து கொடுப்பது, இரு மாநிலங்களின் கருத்தை கவனத்தில் கொள்வது, இரு மாநிலங்களுக்கும் நீதி வழங்குவது ஆகியவை தான் காவிரி நடுவர் மன்றத்தின் கடமை. ஆனால் கர்நாடகாவுக்கு இதில் எந்த அளவுகோள்களையும் கடைபிடிக்கவில்லை.

1974-1990ல் கர்நாடகா தமிழ்நாடு இடையே எந்த ஒப்பந்தமும் கிடையாது. அப்போதும் தமிழ்நாடு 28.2 லட்சம் ஏக்கரில் பயிர் செய்தது. கர்நாடகா 25.8 லட்சம் ஏக்கரில் பயிரிட திட்டமிட்டது. ஆனால் அங்கு கிடைத்த தண்ணீரில் 11.28 லட்சம் ஏக்கர் மட்டுமே பயிரிட முடிந்தது.

இதற்கு நீதிபதி தீபக் மிஸ்ரா குறுக்கிட்டு, கர்நாடகா, தமிழ்நாடு இடையே போடப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் இந்த கோர்ட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளாது. இங்கு அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு அணுகப்படும் என்றார்.

இதற்கு நாரிமன், கர்நாடகா மேல் படுகையிலும், தமிழ்நாடு கீழ் படுகையிலும் உள்ளது. எப்போதும் கீழ் படுகையில் உள்ள நிலங்களுக்குத்தான் பயன் அதிகம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதனை காவிரி நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

கர்நாடக மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தமிழகத்தைவிட இருமடங்கு அதிகம். கர்நாடக மாநிலத்தின் அனைத்து பாசனத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிக்கு வெளிப்புறம் உள்ள பகுதிகளுக்கு கூட பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகின்றன. ஆனால் பெங்களூரு நகர குடிநீருக்கு தண்ணீர் ஒதுக்குமாறு கேட்டால் அது காவிரி பகுதியில் இல்லை என்று வாதிடப்படுகிறது என்றார்.

இதற்கு தமிழக அரசு வக்கீல் சேகர் நாப்டே குறுக்கிட்டு, 1924 ஒப்பந்தப்படி 90 சதவீத தண்ணீர் கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு ஒப்பந்தம் முடிந்தது என்றால் மற்றொரு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த தீர்ப்பையும் மதிக்காமல் நடந்துகொள்கிறார்கள். இவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஆணையிடுகிறது. அதற்கு எதிராக அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இதுபோன்ற விசித்திரங்களைத்தான் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

இதற்கு நாரிமன், தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது என்று நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் எங்கும் கூறப்படவில்லை. கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றம் இழைத்த பிழையை சுப்ரீம் கோர்ட்டு சரிசெய்ய வேண்டும். அந்த தீர்ப்பை ரத்து செய்து அல்லது திருத்தி தீர்ப்பை வெளியிட வேண்டும் என்றார்.

இதற்கு நீதிபதிகள், அப்படி ஒரு முடிவை எடுக்கும்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டுமா? என்பது குறித்து சொலிசிட்டர் ஜெனரல் கருத்தை கோர்ட்டு அறிய விரும்புகிறது. நாளை (இன்றைய) விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். கர்நாடகாவின் வாதங்கள் இன்றுடன் முடிவடைந்தன. கேரளாவுக்கு ஒரு நாள் வழங்கப்படுகிறது. அவர்கள் நாளை (இன்று) தங்கள் வாதங்களை முன்வைக்கலாம்.

புதுச்சேரி அரசு எதுவும் தாக்கல் செய்யவில்லை. தமிழக அரசின் வாதங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com