

பெங்களூர்:
கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தபோது பெரிய அளவில் சுரங்க ஊழல் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதை மையமாக வைத்தே போராட்டங்களையும் நடத்தியது. அதன்பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கும், இதுதான் முக்கிய காரணமாகவும் இருந்தது.
இந்த நிலையில் இப்போது காங்கிரஸ் ஆட்சியிலும் பெரிய அளவில் சுரங்க ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி குற்றம் சாட்டி இருக்கிறார்.
சித்தராமையா முதல்-மந்திரி ஆனதற்கு பிறகு பல புதிய இரும்பு தாது சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில் 30 லட்சம் டன் இரும்பு தாது மட்டும் ஒரு ஆண்டில் எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அதைவிட இருமடங்கு இரும்பு தாதுகளை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இதை கண்காணிக்கும் அரசு மினரல் நிறுவனமும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.
ரூ.5 ஆயிரத்து 450 கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்கள். இதில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கும் அவரது அலுவலகத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளது.
ஊழல் செய்ய வசதியாக தங்களுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை சுரங்க துறைகளில் நியமித் திருக்கிறார்கள். ஊழலுக்கு உடன்படாத அதிகாரிகளை மாற்றி இருக்கிறார்கள்.
அதன்படி செயலாளர் மற்றும் இயக்குனர்கள் கடந்த 4½ ஆண்டுகளில் மட்டும் 5 தடவை மாற்றப்பட்டுள்ளனர். பல அதிகாரிகள் வந்த 3 மாதத்திலேயே மாற்றப்பட்டுள்ளனர். சுரங்கதுறை மந்திரி வினைய்குல்கர்னிக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் யாருக்கும் கட்டுப்படாத நபராக இருந்துள்ளார்.
இந்த ஊழலில் சித்தராமையாவுக்கு சம்பந்தம் இல்லை என்று அவர் கருதினால் உடனடியாக இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல் நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடத்தில் இருக்கின்றன.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #tamilnews #siddaramaiah