

பெங்களூர்:
கோவாவில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு மகதாயி நதி பாய்கிறது. இந்த நதி நீரை பங்கிடுவதில் 2 மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்கீடு நீர் உரிய முறையில் வராததால் கர்நாடக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் அம்மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு டவுண் ஹாலில் கன்னட அமைப்புகள், விவசாயிகள் பங்கேற்கும் பேரணி நடக்க உள்ளது. முழு அடைப்பை ஒட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது நாளை காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை தமிழக லாரிகளை கர்நாடக மாநிலத்தில் இயக்க வேண்டாம் என்று டிரைவர்களுக்கு லாரி உரிமையாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். லாரிகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
சட்டசபை தேர்தலை ஒட்டி பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மைசூரு நகரில் இன்று பேரணி செல்ல இருந்த நிலையில், பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது மாநில காங்கிரஸ் அரசின் சதி என அம்மாநில பா.ஜ.க தலைவர் எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார். #Mahadayi #KarnatakaBandh