கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினால் இங்கிலாந்து தொடருக்கு எளிதாக தயாராகலாம் - கோலிக்கு கபில்தேவ் அறிவுரை

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை மேம்படுத்திக் கொள்ள இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என கபில்தேவ் கூறியுள்ளார். #KapilDev #ViratKohli #CountyCricket
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினால் இங்கிலாந்து தொடருக்கு எளிதாக தயாராகலாம் - கோலிக்கு கபில்தேவ் அறிவுரை
Published on

புதுடெல்லி:

இந்திய வீரர்கள் பலர் இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி உள்ளனர். சுனில் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியுள்ளனர். ஆனால் விராட் கோலி இதுவரையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியது இல்லை. இந்திய அணி அடுத்தடுத்து சர்வதேச தொடர்களுல் விளையாடுவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியா, இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கு தயாராக கோலி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் கூறியுள்ளார். 

இதுகுறித்து கபில்தேவ் கூறியதாவது:

பயிற்சி ஒரு மனிதனை முழுமையடையச் செய்கிறது. விளையாடும் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பயில வேண்டும். எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட பிட்ச்களிலும் ஆட வேண்டும். இதுவே உலகின் சிறந்த வீரர் என்பதற்கான அடையாளம். இதைத்தான் ஆலன் போர்டர், விவ் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் ஆகியோர் மூலம் நாம் சொல்ல வருவது. இவர்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த நாட்டிலும் ரன்கள் குவித்தவர்கள்.

அந்த வகையில் விராட் கோலி மீது ஒரு கேள்விக்குறி இருக்கிறது. ஆம் கேள்விக்குறி உள்ளது. உலகிலேயே கடினமான பிட்ச்களில் ரன்கள் எடுப்பது எளிதல்ல என்று கருதப்படும் இங்கிலாந்தில் கோலி ரன்கள் எடுக்க வேண்டும். 

அவரது பொறுமை மீது நமக்கு ஐயமில்லை, அவர் நன்றாகவே இப்போது ஆடி வருகிறார். இங்கிலாந்தில் நல்ல தொடக்கம் கிடைத்தால் அவருக்கு நல்லது. அவரிடம் திறமை உள்ளது. இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் குறைந்தது இரண்டு சீசன்களில் அவர் விளையாடினால் தவறில்லை. ஏனெனில் உலகின் தலைசிறந்த வீரராக வேண்டுமென்று அவர் விரும்பினால் அனைத்து இடங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும்.

இவ்வாறு கபில்தேவ் கூறினார். 

தற்போது இந்திய வீரர்களான இஷாந்த் சர்மா, புஜாரா ஆகியோர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த இங்கிலாந்து தொடரில் கோலியின் சராசரி 13.40 என்பது குறிப்பிடத்தக்கது. #KapilDev #ViratKohli #CountyCricket

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com