

புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் இரண்டாம் கட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 17 நாட்களாக பாடை கட்டி போராட்டம், கை, கால்களை சங்கிலியால் பிணைத்து போராட்டம், பட்டை நாமம் போட்டு போராட்டம் ஆகியவற்றை நடத்தினர். 18-வது நாளாக இன்றும் ஜந்தர்மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளாலும், வறட்சியாலும் விவசாயிகள் மரணம் அடைவதாக கூறி கழுத்தில் அட்டைகளை தொங்க விட்டிருந்தனர்.
மாநில அரசு மத்திய அரசை பார்த்து தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்கு நிவாரணம் கேட்டதற்கு தராததால் உன்னால் என் பெயர் கெட்டு தமிழகத்தில் நான் கெட்டேன்.
மத்திய அரசு மாநில அரசை பார்த்து, நீ விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல், கடனை தள்ளுபடி செய்யாததால் உன்னால் நான் கெட்டேன் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை அவர்கள் கழுத்தில் மாட்டியிருந்தனர்.
இதற்கிடையே விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை பார்த்து உங்களுக்கு ஓட்டு போட்ட பாவத்திற்கு நான் கெட்டேன் என்று கோஷமிட்டவாறு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளை சந்தித்து பேசி அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கனிமொழி எம்.பி.யுடன் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றனர்.