ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு: மு.க. ஸ்டாலின்

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகம் போற்றுகின்ற வகையிலானது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் உடன் மு.க. ஸ்டாலின்
துரைமுருகன் உடன் மு.க. ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.

இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 21 பேரில் அன்பழகன், கேபிபி சாமி ஆகியோர் இறந்து விட்டனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை அனைத்தும் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் அமர்வு ‘‘மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. சில அடிப்படை தவறுகள் உள்ளதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நோட்டீஸ் அனுப்பலாம். மனுதாரர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தது.

தீர்ப்பு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுகையில் ‘‘உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகம் போற்றுகின்ற வகையிலானது. சட்டமன்ற வரலாற்றில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுக மனதார வரவேற்கிறது. குட்கா இன்னும் சர்வசாதாரணமாக கிடைப்பது கவலை அளிக்கிறது’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com