

புதுச்சேரி:
புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.
ஜிப்மர் மருத்துவமனையின் கிளை காரைக்காலில் உள்ளது. புதுவை ஜிப்மரில் 150, காரைக்கால் கிளையில் 50 என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது.
ஜிப்மர் எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப ஆண்டு தோறும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி நடப்பாண்டுக்கான (2018-2019) நுழைவு தேர்வு ஜூன் மாதம் 3-ந் தேதி நடக்கிறது.
தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக www.jipmer.edu என்ற இணையதளத்தில் கடந்த 7-ந் தேதி முதல் ஏப்ரல் 13-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
பிளஸ்-2 பயிலும் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். முதல் நாளன்று மாலை 4.30 மணி நிலவரப்படி 9 ஆயிரம் பேர், விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 ஆயிரம் பேர் வீதம் விண்ணப்பித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12 நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி நிலவரம் படி நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017-2018-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு எழுத ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு 12 நாளிலேயே 1.16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் இன்னும் விண்ணப்பிக்க 26 நாட்கள் கால அவகாசம் உள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ். நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #Tamilnews