ஜீவசமாதி அடைவதாக ஏமாற்றியதாக புகார்: சாமியார் மகன் உள்பட 7 பேர் மீது வழக்கு

ஜீவசமாதி அடைவதாக கூறி ஏமாற்றிய சாமியாரின் மகன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாமியார் இருளப்பசாமி
சாமியார் இருளப்பசாமி
Published on

மதுரை:

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையை சேர்ந்தவர் இருளப்பசுவாமி (வயது77). சிவபக்தரான இவர், தான் ஜீவசமாதி அடையபோவதாக திடீரென அறிவித்தார்.

கடந்த 12-ந்தேதி தனக்கு சொந்தமான இடத்தில் கட்டில் போட்டு அமர்ந்த அவர் பொதுமக்களுக்கு அருள்வாக்கும் கூறினார். அன்று இரவு 12 மணி அளவில் சிவலிங்கத்தை கட்டிப்பிடித்தபடி தான் ஜீவசமாதி அடைவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இருளப்பசுவாமியின் மகன் கண்ணாயிரம் குறிப்பிட்ட இடத்தில் ஜீவ சமாதிக்காக குழி தோண்டி ஏற்பாடுகளை செய்தார்.

இந்த செய்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும் காட்டுத்தீப்போல பரவ, ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

கலெக்டர் ஜெயகாந்தன் சம்பவ இடம் வந்து சாமியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜீவசமாதி அடைவதில் இருளப்பசுவாமி உறுதியாக இருந்தார்.

இதனை தொடர்ந்து அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால் இருளப்பசுவாமி உடல்நலத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அந்த இடத்தில் உண்டியல் வைக்கப்பட்டு பலரும் காணிக்கை செலுத்தினர்.

இந்த நிலையில் திடீரென ஜீவசமாதி முடிவை கைவிடுவதாக இருளப்ப சுவாமி அறிவித்தார். இதனால் அதிகாலை வரை அங்கிருந்த கலெக்டர் ஜெயகாந்தன் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கூறிச்சென்றார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜீவசமாதி அடைவதாக கூறி சாமியார் ஏமாற்றிவிட்டதாக சம்பவ இடத்தில் திரண்ட மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது இருளப்பசுவாமியின் மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களை ஏமாற்றியதாகவும், உண்டியல் வைத்து பணம் வசூலித்ததாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com