

சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஜெயா டிவி சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் சென்றார். அ.தி.மு.க. தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.
நேற்று இரவு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்தது. இதற்கிடையே, போயஸ் கார்டனில் வருமான வரித்துறை நடத்தி வரும் சோதனைக்கு தினகரன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு ஜெயா டி.வி. சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போயஸ் தோட்டத்தில் அம்மாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள்
வாரண்டுடன் வந்து ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் 2 பென் டிரைவ்கள், ஒரு லேப்டாப் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதஙகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், எனது சகோதரி ஷகீலாவை அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். ஜெயலலிதா வாழ்ந்த இடத்துக்கு வந்த துன்பத்தை யாரும் தட்டிக் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.