நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு ஓபிஸ் தான் காரணம் - ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தான் காரணம் என ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெ.தீபா
ஜெ.தீபா
Published on

சென்னை:

தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டது. பின்னர், இந்த சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த தொகையை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தியது. மேலும், வேதா நிலையத்தில் உள்ள அசையும், அசையா சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெ.தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் ? எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன் தீபா தொடர்ந்த இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார்.இந்நிலையில் இது குறித்து விளக்கமளிக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஜெயலலிதா சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் நடத்துவது சொத்துக்கான போராட்டம் இல்லை. நான் நடத்துவது உரிமைக்கான போராட்டம்.

உங்களுக்கு என்ன வேண்டும் என எனது அத்தை ஜெயலலிதா பல முறை என்னிடம் கேட்டுள்ளார் ஆனால் நாங்கள் அதை நிராகரித்து வந்துள்ளோம். ஜெயலலிதா விரும்பாததால் என்னால் போயஸ் இல்லத்திற்கு செல்ல முடியவில்லை என்பது இல்லை. சசிகலாவால் தான் போயஸ் இல்லத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. ஜெயலலிதா இருந்தபோது எனக்கும், போயஸ் இல்லத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் சித்தரித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தால் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஓ.பன்னீர் செல்வம் தான்.  நான் இப்போது தெய்வத்தையும், ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பி உள்ளேன்.

ஆறுமுகசாமி ஆணையம் 6 முறை அழைத்தும் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்? நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு ஓபிஸ் தான் காரணம். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது பற்றி அதிமுக தலைவர்களுக்கு கவலையே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com