மக்கள் போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் - ஜெ.தீபா குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் போராடும் நிலைக்கு செல்ல தற்போதைய அ.தி.மு.க. அரசு தான் காரணம் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கூறினார்.
பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை ஜெ.தீபா வழங்கியபோது எடுத்தபடம்.
பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை ஜெ.தீபா வழங்கியபோது எடுத்தபடம்.
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள வஞ்சியாதித்தன் புதுத்தெருவில் நடந்தது. விழாவில் பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் கூறியதாவது:-

காவிரி தண்ணீர் மிகவும் முக்கியமானது. காவிரி என்றாலே போராட்டம் தான் என்ற சூழல் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. ஆனால் உரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்? மக்கள் அனைவரும் துயரத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தமிழக மக்கள் போராடும் நிலைக்கு செல்ல தற்போதைய அ.தி.மு.க. அரசு தான் காரணம். காவிரி விவகாரத்தில் அரசியல் கட்சியினர் கண்துடைப்புக்காக போராடுகிறார்கள்.

மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. தமிழகத்தில் ஊழல் செய்பவர்களை ஒழிக்க வேண்டும். சாதி, மதத்தை வைத்து கட்சி நடத்துபவர்களை விரட்டி அடிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைத்த வலுவான தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஜெ.தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மக்களை பற்றி தமிழக அரசுக்கு எந்த கவலையும் இல்லை. தமிழக அரசு மத்திய அரசால் இயக்கப்படுகிறது. காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்கள் தொடரும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே தமிழர்கள் போராடுவது சரியானது தான். ஆனால் அமைதியாகவும், முறைப்படியும் போராட வேண்டும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com