லட்சுமி ஜூவல்லரியில் இன்று 3-வது நாளாக வருமான வரி சோதனை

புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற நகை கடையான ஸ்ரீலட்சுமி ஜூவல்லரியில் இன்று 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது.
லட்சுமி ஜூவல்லரியில் இன்று 3-வது நாளாக வருமான வரி சோதனை
Published on

புதுச்சேரி:

தமிழகத்தில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வீடு, நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரிதுறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக இந்த சோதனை நீடித்தது. இன்றும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதுபோல் புதுவை அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜூவல்லரியில் வருமானவரி துறையினர் நேற்று முன்தினம் காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த நகை கடையிலும் மற்றும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான பண பரிமாற்ற நிறுவனம், காலாப்பட்டு அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் உள்ளிட்டவற்றில் சசிகலா குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ளனர் என்ற தகவலின் அடிப்படையில் வருமான வரி துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இரவு 10.30 மணி வரை இந்த சோதனை நீடித்தது.

பின்னர் நகை கடையை பூட்டி சாவியை எடுத்து கொண்ட வருமான வரி துறையினர் மீண்டும் நேற்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர்.

இதுபோல் இந்த நகை கடைக்கு சொந்தமான பண பரிமாற்ற நிறுவனம் மற்றும் நட்சத்திர சொகுசு ஓட்டலிலும் சோதனை மேற்கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

நேற்று இரவு சோதனை முடிவில் நகை கடை மற்றும் பண பரிமாற்ற நிறுவனம், சொகுசு ஓட்டலில் இருந்து பல்வேறு ஆவணங்களை வருமான வரி துறையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர்.

இன்று 3-வது நாளாக இந்த சோதனை நீடித்தது. நகை கடையில் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டாலும் நகை வாங்க வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com