ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது பெங்களூரு

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது.
Published on

கோவா:

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- எப்.சி. கோவா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது. 40-வது நிமிடத்தில் பெங்களூரு கோல் கீப்பர் குர்பிரீத்சிங் சந்து, கோல் பகுதியில் வைத்து எதிரணி வீரர் மானுல் லான்ஜரோட்டை முரட்டுதனமாக பிடித்து தள்ளியதால் சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளாகி வெளியேற்றப்பட்டார். இதனால் எதிரணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைமை உருவானதால் அது பெங்களூருவுக்கு பின்னடைவாகி போனது.

கோவா அணியில் பெரான் கோரோமினாஸ் 3 கோலும் (16, 33, 63-வது நிமிடம்), மானுல் லான்ஜரோட் பெனால்டி வாய்ப்பில் ஒரு கோலும் அடித்தனர். பெங்களூரு தரப்பில் மிகு (21 மற்றும் 60-வது நிமிடம்), எரிக் பார்தலு (57-வது நிமிடம்) கோல் போட்டனர். கோவா அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அதே சமயம் 3-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணி தழுவிய முதல் தோல்வியாகும்.

இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்- கொல்கத்தா (இரவு 8 மணி) அணிகள் சந்திக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com