

பாக்தாத்:
ஈராக்கில் மொசூல் நகரில் நடந்த சண்டையின்போது சிக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது முறைப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படுகிறது. அப்படி சிக்கிய ஒருவர், அப்துல்லா உசேன் ஆவார்.
அவர் மீது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து சண்டை போட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் மொசூல் அருகே அமைந்துள்ள கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அதன் முடிவில் அப்துல்லா உசேன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து சண்டை போட்டது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிபதிகள் அவருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.
அப்போது நீதிபதிகள், “2005-ம் ஆண்டு இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் பிரிவு 2 மற்றும் 3 படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல்லா உசேனை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறோம்” என கூறினர். இந்த தீர்ப்பை கேட்டதும் அவர் கதறி அழுதார்.
மொசூலில் பிடிபட்ட பிற ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களையொட்டி, 2 கோர்ட்டுகளில் மட்டுமே இவர்கள் மீதான வழக்குகளில் விசாரணை நடக்கிறது.
இந்த கோர்ட்டு விசாரணை மனித உரிமை ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், நாட்டில் சட்டம்- ஒழுங்கை மீண்டும் நிலை நிறுத்துவதில் தாங்கள் முக்கிய பங்களிப்பு செய்வதாக நீதிபதிகள் கூறுகின்றனர்.