ஐ.எஸ். அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட மொசூல் நகரில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டதை அந்த நகர மக்கள் நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஐ.எஸ். அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட மொசூல் நகரில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்
Published on

சிரியாவிலும், ஈராக்கின் சில பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் 2-வது மிகப்பெரிய நகரான மொசூலை கைப்பற்றிக் கொண்டனர். அதை, சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தங்களுடைய நாடாகவும் அறிவித்தனர்.

இதையடுத்து மொசூல் நகரை மீட்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் போரில் குதித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மொசூல் நகரின் பெரும்பகுதியை ராணுவம் கைப்பற்றியது. எனினும் கிழக்கு பகுதியை அவ்வளவு எளிதில் மீட்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மொசூல் நகரை மீட்க முழுவீச்சில் இறங்கியது. அந்த நகரின் நாலாபுறமும் சுற்றி வளைக்கப்பட்டு ராணுவம் மெல்ல மெல்ல முன்னேறியது.

2 வாரங்களுக்கு முன்பு, இரு தரப்புக்கும் இடையே உச்சக்கட்ட போர் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை மொசூல் நகரை ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்டது. அந்த நகரின் அரசு கட்டிடங்களில் ஈராக்கின் தேசிய கொடியும் ஏற்றப்பட்டது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி அன்றே பாக்தாத் நகரில் வெளியிட்டார்.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு, மொசூல் மீட்கப்பட்டதை அந்த நகர மக்கள் உற்காசமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஈராக் போலீசார் ராணுவத்தினருடன் நகர தெருக்களில் சென்று மக்களிடம் மொசூல் முழுமையாக மீட்கப்பட்டது பற்றி அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மரண பீதியில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள் புத்துயிர் பெற்றதுபோல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் வீடுகளை விட்டு துள்ளிக் குதித்து வெளியே ஓடி வந்தனர். தெருக்களில் ஆனந்த நடனமும் ஆடினர். தேசிய கொடியை அசைத்தவாறே அங்கும் இங்குமாக ஓடி தங்கள் ராணுவத்தின் வெற்றியை கொண்டாடினர்.

அப்போது இனப்பாகுபாடு இன்றி நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம். நமது ரத்தத்தையும், ஆன்மாவையும் நமக்காகவே தியாகம் செய்தோம் என்று உணர்ச்சி பெருக்குடன் அவர்கள் முழங்கினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பிரதமர் ஹைதர் அல்-அபாதி மொசூல் நகருக்கு வந்தார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கூட்டுப்படை மற்றும் ஈராக் ராணுவ அதிகாரிகளை சந்தித்து அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் அல்-அபாதி மக்களிடையே உரையாற்றி மொசூல் நகரம் மீட்கப்பட்டதை முறைப்படி அந்த நகர மக்களிடம் அறிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். பயங்கரவாதத்தை தலைதூக்க விடக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். அப்போது, அங்கே கூடியிருந்த மக்கள் ஈராக் வாழ்க என்று முழுங்கினர்.

மொசூல் நகரம் மீட்கப்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்த அறிக்கையில், “அமெரிக்க ஆதரவு கூட்டுப்படையினரின் உதவியுடன் ஈராக் ராணுவம் மொசூல் நகரை முற்றிலுமாக மீட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கோரப்பிடியில் இருந்து மக்கள் விடுபட்டு விட்டனர். நாகரிக சமூக மக்களுக்கு எதிரானவர்களை விரட்டி அடித்ததற்காக ஈராக் பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஐ.நா.சபையும் இதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை தலைவர் ஆன்டனியோ குட்ரெஸ் விடுத்த அறிக்கையில், “பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இது குறிப்பிடத்தக்க வெற்றி ஆகும். இனி போரின் போது புலம் பெயர்ந்த மக்களை அங்கு மீண்டும் வரவழைத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சட்டத்தின் ஆட்சி நிலைபெற செய்யவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் ஈராக் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com