சென்னையில், ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ‘டிஸ்மிஸ்’ ஆக வாய்ப்பு: மத்திய அரசு தகவல்

சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில், ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ‘டிஸ்மிஸ்’ ஆக வாய்ப்பு: மத்திய அரசு தகவல்
Published on

சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு, கடந்த 29-ந் தேதி தொடங்கி, வருகிற 5-ந் தேதிவரை நடக்கிறது. சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பொது அறிவு 2-ம் தாள் தேர்வு நடைபெற்றது. எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, தேர்வு வாரியத்தின் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வுக்காக வந்தனர்.

அப்போது, இளைஞர் ஒருவரின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியதாக இருப்பதை கண்டனர். அவரை சோதனை செய்தபோது, அவர் தனது காதில் செல்போன் ‘ப்ளூடூத்’தை மாட்டிக்கொண்டு, எதிர்முனையில் இருப்பவரிடம் கேள்விக்கான விடைகளை கேட்டு கேட்டு எழுதி வந்ததை கண்டுபிடித்தனர். அவரை தேர்வுக்கூட அறையில் இருந்து வெளியேற்றி, சென்னை பெருநகர போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் அதிகாரிகள் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த சபீர் கரீம் (வயது 30) என்று தெரியவந்தது. அவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

கேள்விகளை சபீர் கரீம் வாசிக்க, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந்தபடி, அவருடைய மனைவி ஜாய்சி ஜாய், அவற்றுக்கான விடைகளை ‘ப்ளுடூத்’ மூலம் வாசித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, எழும்பூர் போலீசார் சபீர் கரீம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்து கைதான ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஐ.பி.எஸ். பதவிகளை நிர்வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், சபீர் கரீமின் மோசடி குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகு, அவர் மீது இந்த நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இவரை (சபீர் கரீம்) போன்ற நபர்கள், ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கு பொருத்தமானவர்கள் அல்ல. எனவே, தமிழக அரசிடம் இருந்து அறிக்கை வந்த பிறகு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு முன்பாக, அவர் விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்படும். அவர் உரிய விளக்கம் அளிக்க தவறினால், பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com