

புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்திடம் நேற்று சி.பி.ஐ. விசாரணை மீண்டும் தொடங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் அப்போது நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தும் கன்சல்டன்சி நிறுவனம் ரூ.10 லட்சம் ஆதாயம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர். பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் அவரை அன்று மதியம் ஆஜர்படுத்தினர். கார்த்தி சிதம்பரத்தை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் நேற்று மதியம் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் சிறப்பு நீதிபதி சுனில் ராணா முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை ஆஜர்படுத்தினார்கள்.
மருத்துவ பரிசோதனைக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாலும், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் அவருக்கு எதிராக தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவரை மேலும் 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6-ந் தேதி வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். அவருடைய வக்கீல் அவரை காலை மற்றும் மாலை தலா ஒரு மணி நேரம் சந்திக்கலாம் என்றும், மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் அவருக்கு வழங்கப்படலாம் என்றும், வீட்டு சாப்பாட்டுக்கு அனுமதி இல்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை மீண்டும் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சி.பி.ஐ. காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை 8 மணிக்கு அவரிடம் விசாரணையை தொடங்கியதாகவும், சி.பி.ஐ. வசம் உள்ள செல்போன்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சில கேள்விகளையும், இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவருடைய ஆடிட்டர் பாஸ்கரராமன் லேப்டாப்பில் கிடைத்த சில இமெயில் பரிமாற்றங்களின் அடிப்படையிலும் கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.
அவர் வெளிநாடு சென்றபோது இந்த பரிமாற்றம் தொடர்பாக சில ஆதாரங்களை அழிக்க முற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. பல கேள்விகளுக்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளிக்க மறுத்ததாகவும், விசாரணையில் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் அருண் நடராஜன் அவரை சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று சந்தித்தார். அவரிடம் நிருபர்கள் விசாரணை பற்றி கேள்வி எழுப்பியபோது, அவர் உள்ளே நலமாக இருக்கிறார் என்று மட்டும் கூறினார். மற்ற கேள்விகள் எதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை.
கார்த்தி சிதம்பரம் மதிய உணவுக்கு ‘ஸ்விக்கி’ அல்லது ‘சொமாட்டோ’ என்ற செல்போன் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்து வரவழைக்க வேண்டும் என்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். அதேபோல கார்த்தி சிதம்பரம் தனது வக்கீலுடன் தமிழில் பேசினார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்த அதிகாரிகள், எங்கள் முன்பு ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்றனர்.
பதிலுக்கு கார்த்தி சிதம்பரமும் அதிகாரிகளிடம், நீங்கள் இந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறினார். அதற்கு அதிகாரிகள் நீங்கள் தான் எங்கள் காவலில் இருக்கிறீர்கள், நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்று கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கார்த்தி சிதம்பரம் மீண்டும் 6-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலம் மற்றும் சி.பி.ஐ. வசம் உள்ள சில ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலரிடமும் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. #KartiChidambaram #tamilnews