ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை டெல்லி கோர்ட் இன்று விசாரணைக்கு ஏற்றது.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Published on

புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த புகார் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது விசாரணை காவல் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கோர்ட்டில் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பில் இருந்து மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 18-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற டெல்லி சிபிஐ கோர்ட்டு இந்த வழக்கு தொடர்பாக வரும் 24-ம் தேதி ப.சிதம்பரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com