இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணை முடிந்த நிலையில், தேர்தல் ஆணையம் வருகிற 13-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
Published on

புதுடெல்லி:

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயருக்கு இரு அணியினரும் உரிமை கோரியதால் சின்னம், கட்சி பெயரை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது.

கட்சி சின்னம், பெயருக்கு உரிமை கோரி தேர்தல் கமி‌ஷனில் இரு அணியினரும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் சின்னம், கட்சி பெயர் தொடர்பான வழக்கில் அக்டோபர் 31-ந்தேதிக்குள் தேர்தல் கமி‌ஷன் முடிவு அறிவிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இதையடுத்து சின்னம், கட்சி பெயர் தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் கமி‌ஷன் முன் 6-ந்தேதி (இன்று) நடைபெறும் என்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறும் அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் தகவல் அனுப்பியது.

இதற்கிடையே தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு தினகரன் தரப்பு அளித்த கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் நிராகரித்தது. இதை எதிர்த்து தினகரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தேர்தல் கமி‌ஷனில் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை தொடங்கிய நிலையில் இதற்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்தால் தேர்தல் ஆணையம் இதுவரை மேற்கொண்ட செயல்பாடுகள் பாதிக்கப்படும் எனக்கூறி தினகரன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று மாலை இரட்டை இலை தொடர்பாக சுமார் 2 மணி நேரம் தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. முதலமைச்சர் அணி சார்பில் வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதங்களை துவங்கினார். தினகரன் அணி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் வழங்கக்கூடாது எனவும், ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள், அவர்களில் 95% எங்கள் பக்கமே உள்ளனர் எனவும் முதலமைச்சர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம் வழக்கு விசாரணை வருகிற 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. தினகரன் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com