

மதுரை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதத்துறை பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் செல்போனில் பாலியலுக்கு அழைத்த விவகாரம் தமிழக உயர்க்கல்வித்துறை வரலாற்றில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவிகளை சில தேவைகளுக்காக உயர் அதிகாரிகள் விரும்புகிறார்கள் என்றும், அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மதிப்பெண் மற்றுமல்ல வாழ்வின் அடுத்தக்கட்டத்துக்கும் முன்னேறி செல்லலாம் என்று ஆசைவலை விரித்து பாலியலுக்கு அழைத்த நிர்மலாதேவியின் செல்போன் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நிர்மலாதேவியை போலீசார் கைது செய்து 2 நாட்கள் விசாரணை நடத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நிர்மலா தேவி பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
செல்போன் உரையாடலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், மேலிடம் என்று நிர்மலா தேவி குறிப்பிட்ட நபர்கள் யார்-யார்? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கிளப்பப்படும் நிலையில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
சந்தானம் தனது முதல் கட்ட விசாரணையை நாளை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக நாளை மதுரை வரும் அவர் முதல் கட்டமாக நிர்மலாதேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ பதிவை ஆய்வு செய்கிறார்.
இதைத்தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை தனித் தனியாக சந்தித்து விசாரணை நடத்துகிறார்.
பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், டீன், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார்.
இந்த விசாரணை தகவல்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படுகின்றன. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் அருப்புக்கோட்டைக்கு விசாரணை அதிகாரி சந்தானம் செல்கிறார்.
அங்கு சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் பாலியலுக்கு அழைக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து விசாரணை நடத்துகிறார்.
இந்த விசாரணை அனைத்தும் ரகசியமாக பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நிர்மலாதேவியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தாராளமாக புகார் தெரிவிக்கலாம் என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கடந்த 2 மாதமாக நடந்து வந்து சர்ச்சைகள் குறித்து விரிவாக விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தாலும், எனது விசாரணை நிர்மலா தேவி விவகாரத்தில் பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு குறித்து விரிவாக ஆராயப்படும்.
பெண்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்கு பெண் அதிகாரிகள் தேவைப்படும் பட்சத்தில் அதற்கு தகுதியான நபரை தேர்வு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்படும். இந்த விசாரணையை 2 வாரத்துக்குள் முடிக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் விசாரணை நடத்துவதற்காக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தனி அறை தயார் செய்யப்பட்டுள்ளது.