

புதுச்சேரி:
பிரெஞ்சு நாட்டுடன் புதுவை அரசு இணைந்து நடத்தும் போஞ்சூர் இந்தியா என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சர்வதேச அளவிலான பாய்மர படகு போட்டியை நடத்துகிறது.
4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியினை காந்தி சிலை அருகே உள்ள கடற்கரை பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்தியாவின் பிரெஞ்சு தூதர் அலெக்சாண்டர் சைக்கிளர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களாள புதுவை, தமிழகம், கோவா வீரர்கள் உட்பட பிரான்சு, அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் 74 பேர் இதில் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் 10 மணிவரையும் , மாலை 4 மணிமுதல் 5 மணிவரை காற்றின் வேகத்தை பொறுத்து போட்டி நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, புதுவைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொழுது போக்கு மையம், நீர் சறுக்கு விளையாட்டு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
இதேபோன்று இந்தியாவிற்கான பிரெஞ்சு தூதர் அலெக்சாண்டர் சைக்கிளர் பேசும் போது, புதுவையில் சுற்றுலா துறை மூலம் பாய் மர படகு போட்டி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுவை பிரான்ஸ் இணைந்து நடத்தும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்று பேசினார்.
விழாவில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதே போல் பிரெஞ்சு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஈபைக் மற்றும் ஈசைக்கிளை அறிமுகப்படுத்தும் விழா பிரெஞ்சு தூதரகம் முன்பு நடைபெற்றது. இதனை கவர்னர் கிரண்பேடி, இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் அலெக்சாண்டர் சைக்கிளர் ஆகியோர் அறிமுகப்படுத்தி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பிரெஞ்சு தூதரக அதிகாரி காத்ரின் ஸ்வார்ட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews