ராஜஸ்தானில் முனிசேகர் தவறுதலாக சுட்டதில் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம்: தமிழக காவல் துறை அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையனை பிடிக்க சென்றபோது உடன்வந்த ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதில் மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் அடைந்ததாக தமிழக காவல் துறை இன்று அறிவித்துள்ளது.
முனிசேகர், பெரியபாண்டியன்.
முனிசேகர், பெரியபாண்டியன்.
Published on

சென்னை:

கொளத்தூர் நகைக்கடையின் மாடியில் துளைபோட்டு கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பெரியபாண்டியனுடன் சென்ற கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காயத்துடன் உயிர் தப்பினார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தனிப்படை போலீசாருடன், கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்த போது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவரது துப்பாக்கியை பிடுங்கியே கொள்ளையர்கள் சுட்டதாக முதலில் கூறப்பட்டது. இதன் பின்னர் அவர் பலியானது பற்றி வேறுவிதமாக தகவல் பரவியது.

அவருடன் சென்ற இன்ஸ்பெக்டர் முனிராஜ், கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது முனிராஜின் துப்பாக்கி கீழே விழுந்ததாகவும், அந்த துப்பாக்கியை எடுத்தே கொள்ளையர்கள் சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், ஜெய்தரன் காவல்நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியபாண்டியனுடன் சென்ற மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னர், முனிசேகர் அளித்த வாக்குமூலத்தில், கொள்ளையர்கள் தாக்கியபோது தனது துப்பாக்கி கீழே விழுந்ததாகவும், அதை பெரியபாண்டி எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். எனவே, முனிசேகரின் துப்பாக்கியால் கொள்ளையர்கள் சுட்டதில் பெரியபாண்டியன் இறந்ததாக முன்னர் கூறப்பட்டது.

குண்டு காயங்களுக்காக ராஜஸ்தானில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய முனிசேகரிடம் தமிழக காவல் உயரதிகாரிகள் இதுதொடர்பாக விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பெரியபாண்டியனை காப்பாற்ற முயன்றபோது முனிசேகரின் கையில் இருந்த துப்பாக்கி வெடித்ததில் பெரியபாண்டியன் மரணம் அடைந்ததாக தமிழக காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் போலீசார் நடத்திவரும் விசாரணைக்கு பின்னர், ஆய்வாளர் முனிசேகர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com