

மாலே:
அரசியல் குழப்பம் நிலவி வரும் மாலத்தீவில் தற்போது அதிபர் யாமீன் நெருக்கடி நிலையை அமல்படுத்தியுள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என கைது வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே, உள்ளூர் செய்தி நிறுவனங்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டன.
இதனால், அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியே உள்ளவர்கள் விரைவாக அறிய முடியாத சூழல் உள்ளது. மேலும், சர்வதேச ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏ.எப்.பி நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு நிருபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இந்தியரும் ஒருவர். அவரது பெயர் மோணி சர்மா. அதேபோன்று இங்கிலாந்தை சேர்ந்த ஆதிஷ் ராவ்ஜி படேல் என்ற நிருபரும் கைதானார். அவர்கள் சுற்றுலா விசாவில் அங்கு சென்று நிருபர்களாக பணியாற்றி வந்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட இருவரையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மாலத்தீவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Maldives #AFP #TamilNews