சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்ய தயார் - பிரதமர் மோடி அறிவிப்பு

மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருப்பதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்ய தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்ய தயார் - பிரதமர் மோடி அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருப்பதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்ய தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.7 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவும் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், இதற்கு பிரதமர் மோடி நேற்று பதிலடி கொடுத்தார். டெல்லியில் நடைபெற்ற கம்பெனி செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டின் வளர்ச்சி மந்தநிலையில் இருப்பதை அரசு உணர்ந்துள்ளது. அதை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்ததை சிலர் அழிவு அறிகுறியாக குறிப்பிடுகிறார்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 8 தருணங்களில், 5.7 சதவீதமாகவோ அல்லது அதை விட குறைவாகவோ உள்நாட்டு உற்பத்தி விகிதம் இருந்துள்ளது. இந்தியாவை வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றியதே நாங்கள்தான். பொருளாதாரம் உறுதியான நிலையில் இருக்கிறது.

கடந்த 2 காலாண்டுகளில், உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறைந்ததை மட்டுமே பார்த்த விமர்சகர்கள், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 10 சதவீதமாக இருந்த பண வீக்கத்தை நாங்கள் 2.5 சதவீதமாக குறைத்ததை பார்க்க தவறி விட்டனர். மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை 4 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும், நிதி பற்றாக்குறையை 4.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும் குறைத்துள்ளோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான முடிவு எடுக்கும் திறன், இந்த அரசுக்கு உள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும். உடனடி பாராட்டு பெற சலுகை கொடுப்பதற்கு பதிலாக, அமைப்புரீதியான சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவோம். நாங்கள் எடுக்கும் முடிவுகளால், இந்தியா புதிய வளர்ச்சி பாதையை நோக்கி நடைபோடும்.

நிகழ்கால ஆதாயங்களுக்காக நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தை உருவாக்க மாட்டேன்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் முட்டுக்கட்டைகளை கண்டறிந்து அகற்றுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்யவும் தயாராக இருக்கிறோம். கருப்பு பணத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக, 2 லட்சத்து 10 ஆயிரம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com