

காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காஷ்மீரின் பல பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி பாதுகாப்பு படையினரை கொன்று குவித்த ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத இயக்கத் தளபதி பர்ஹான் வானி கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த சம்பவத்திற்கு பிறகு காஷ்மீரில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால், தற்போது வரை சில இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.
பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பர்ஹான் வானியை தியாகியாக சித்தரித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், ராணுவ தளபதி குவாமர் ஜாவெத் பாஜ்வா ஆகியோர் அஞ்சலி செலுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே, ‘பாகிஸ்தான் அரசு இதுவரை தடைசெய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் தயாரித்து தந்த அறிக்கைகளை வாசித்து வந்தது. தற்போது பர்ஹான் வானியை தியாகியாக சித்தரித்து புகழாரம் சூட்டுவதன் மூலம் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.