

காஷ்மீர் மாநில சர்வதேச கட்டுப்பாட்டு கோடு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 23-ந் தேதி பூஞ்ச் மற்றும் ஜாலியஸ் பகுதியில் இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மேலும், பீரங்கி குண்டுகளையும் வீசினார்கள்.
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய வீரர்கள் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அவர்களின் ராணுவ தலைமையகம் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை உறுதிப்படுத்திய அந்த பகுதியில் உள்ள கிராமவாசிகள் கடும் புகை எழுந்ததாக தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கிராம மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவில்லை எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.