என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கை ஆன்லைன் முறையால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு- மு.க.ஸ்டாலின்

என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் பெரிய அளவில் பாதிப்படைவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #Engineering #MKStalin
என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கை ஆன்லைன் முறையால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு- மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2018-ம் ஆண்டு தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு, இதுவரை மாணவர்களின் நேரடி பங்களிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்ததை திடீரென்று மாற்றி, இந்த வருடத்திலிருந்து இணைய வழியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, புதிதாக கர்நாடகாவில் இருந்து வந்து துணை வேந்தராக பொறுப்பேற்று இருப்பவரின் முதல் குழப்ப நடவடிக்கையாகவும், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழி பயின்ற மாணவர்களின் நலனுக்கு முற்றிலும் விரோதமாகவும் அமைந்திருக்கிறது.

1.50 லட்சம் மாணவர்களுக்கு மேலான சேர்க்கை முறையில் “ஆன்லைன் விண்ணப்பம்”, “ஆன்லைன் கலந்தாய்வு”, என்றெல்லாம் அறிவித்திருப்பது, கிராமப்புற மாணவர்களை சொல்லொனாத் துயரத்திற்கு உள்ளாக்கி இருப்பது மட்டுமின்றி, ஏற்கனவே ஆன்லைன் விண்ணப்பங்கள் விற்பனை 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்து விட்டது.

பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவ மாணவியரும் தங்களது மின்னஞ்சல் முகவரியையோ, பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியையோ கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

கிராமங்களில், குறிப்பாக ஆன்லைன் வசதி இல்லாத குக்கிராமங்களில் உள்ள ஒரு ஏழை மாணவன் பொறியியல் கல்லூரியில் சேர நினைத்தால், அந்த மாணவனால் எப்படி மின்னஞ்சல் முகவரியை கொடுக்க முடியும்? அவர்களுடைய பெற்றோருக்கு எப்படி மின்னஞ்சல் முகவரி இருக்க முடியும்? இந்த அடிப்படை உண்மைகளைக் கூட தெரிந்து கொள்ளாமல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும், அ.தி.மு.க. அரசும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆன்லைன் விண்ணப்பம் என்றும் ஆன்லைனிலேயே கலந்தாய்வு என்றும் கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கிறது.

இதன்மூலம், தங்களுக்கு வேண்டிய கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்களுக்கு நேரமும் கிடைக்காது. அதற்கான தொழில்நுட்ப வசதியும் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு தெரிந்திருக்காது. ஆகவே, இந்த ஆன்லைன் முறை பொறியியல் கல்லூரி சேர்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் ஆபத்து இருக்கிறது.

அதுமட்டுமின்றி, முதல் நிலை பட்டதாரிகளாக பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்புவோருக்கும் இந்த ஆன்லைன் விண்ணப்ப முறை ஆபத்தாகவே இருக்கும். ஆகவே, ஆன்லைன் விண்ணப்ப முறை மற்றும் ஆன்லைனிலேயே மே 3-ந் தேதி முதல் 30 -ந் தேதிவரை கலந்தாய்வு நடத்தினாலும், தமிழக மாணவ மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் விருப்பம் மற்றும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நேரடியாக விண்ணப்பங்களை விற்பது மற்றும் நேரடி கலந்தாய்வும் அனுமதிக்கப்பட, அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நேரடி கலந்தாய்வு தவிர, ஆன்லைன் கலந்தாய்வு தொடர வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒன்றிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் சேவை மையங்களை துவங்கி, அவற்றின் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழி பயின்ற மாணவர்களின் பொறியியல் கனவு எக்காரணம் கொண்டும் சிதைந்து விடாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com