கன்னியாகுமரி, நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
மழையால் வெள்ளக்காடான சாலை
மழையால் வெள்ளக்காடான சாலை
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி பருவ மழை தொடங்கிய நாளில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. சென்னையில் இயல்பை விட அதிக மழை பெயதுள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com