

கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் வரை பலியான சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வியே காரணம் என்றும், மருத்துவர்களை பலிகடா ஆக்கக் கூடாது என்றும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆறு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை அளித்துள்ளது. அதில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் நிறுவனம் பல முறை எச்சரித்தும் சுகாதார துறை அதற்கான நிதி ஒதுக்கவில்லை.
தற்போது இதுபோன்ற சூழ்நிலையில் மருத்துவர்களை பலிகடா ஆக்கக்கூடாது. மருத்துவமனை முதல்வர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.