ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவை கட்டுமானத்திற்கு ஐ.ஐ.டி உறுதித்தன்மை சான்றிதழ்

சென்னையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவையின் கட்டுமானத்திற்கான உறுதித்தன்மை குறித்து ஐ.ஐ.டி. சான்றிதழ் வழங்கி உள்ளது.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவை கட்டுமானத்தை படத்தில் காணலாம்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பீனிக்ஸ் பறவை கட்டுமானத்தை படத்தில் காணலாம்.
Published on

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் சமாதியை பார்ப்பதற்கு ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு, பகலாக பணிகள் நடந்து வந்த பணி தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஜெயலலிதா நினைவு மண்டபம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. துபாயில் இருந்து கொண்டு வரப்பட்ட பீனிக்ஸ் பறவையின் ராட்சத சிறகுகள் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அலங்கார செடிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

துபாய் நாட்டில் இருந்து வந்த கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த கட்டிட கலை நிபுணர்களின் வழிகாட்டுதல் படி நினைவிடத்தில் ராட்சத பீனிக்ஸ் பறவை வடிவிலான கட்டுமானம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ஐ.ஐ.டி. கட்டிடக்கலை நிபுணர்கள் ஆய்வு செய்து, தரமாக அமைக்கப்பட்டு இருப்பதுடன், உறுதி தன்மைக்கான சான்றிதழும் வழங்கி உள்ளனர்.

ஜெயலலிதாவின் சமாதியை, எம்.ஜி.ஆர். நினைவு மண்டபம் அருகே இருந்தபடி பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நினைவிடத்தை சுற்றி 9 ஏக்கர் நிலப்பரப்பில் நீர் ஊற்றுகள், நீர் தடாகங்கள், புல்வெளிகள், நடைபாதைகள் அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் 2 அல்லது 3 வாரத்தில் நிறைவடைந்து விடும்.

அதற்கு பிறகு நவம்பர் மாதம் 2 அல்லது 3-வது வாரம் அரசிடம் முறையாக ஜெயலலிதா நினைவிடம் ஒப்படைக்கப்படும். அதற்கு பிறகு திறப்பு விழா தேதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தமிழக அரசு முறையாக அறிவிக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com