

திருப்பூர்:
காங்கயம் இன காளைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த காளைகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு சந்தைகள் தற்போது களை கட்ட தொடங்கி உள்ளது.
காங்கயம் அருகே உள்ள நத்தக் காடையூர்-பழைய கோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சந்தையில் பசுக்கள், காளைகள், கன்றுகள் என 230 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 132 மாடுகள் ரூ. 65 லட்சத்துக்கு விற்பனையானது. 35 காளை கன்றுகள் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
அதிகபட்சமாக செவலைப் பசு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சந்தை ஆடு, மாடு, கோழிகளுக்கு பிரசித்தி பெற்ற சந்தையாகும். இங்கு கொங்கு மாட்டு கன்றுகள் சந்தை திங்கட்கிழமை நடைபெறும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலையிலே கன்றுகள் விற்பனைக்கு வந்து விடும்.
அதே போல் கோழி, சேவல்கள் அதிகாலை 3 மணிக்கே விற்பனைக்கு வந்து விடும். திருப்பூர், ஈரோடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் குன்னத்தூர் சேவல்களை வாங்க இரவே வந்து விடுவார்கள். அதே போல் கொங்கு மாட்டு கன்று வாங்குவதற்கு திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். கடந்த 20 வருடத்திற்கு முன் குன்னத்தூர் சந்தை நாட்டு சர்க்கரை, அரிசிக்கு பெயர் போன சந்தையாகும். ஆனால் இப்போது ஆடு, மாடு, சேவல்கள் அதிகப்படியாக விற்பனையாகிறது. இந்த மாட்டு சந்தையில் கொங்கு இன கன்று குட்டி அதிகபட்சமாக ரூ. 37 ஆயிரத்திற்கு விற்பனையானது.