அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி வகுப்புகள் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொன் விழா ஆண்டு நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் செங்கோட்டையன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொன் விழா நினைவு வளைவை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது,

பொதுவாக ஒரு இடத்தில் கடுமையான உழைப்பு இருந்தால் அங்கு வெற்றி நிச்சயமாக இருக்கும். கல்வியை முயற்சியுடன் கற்போமானால் வெற்றி நமக்கு நிச்சயம் உண்டு. கலை மகள் இருக்கும் இடம் பள்ளி. அந்த பள்ளியை முழுமையாக நாம் பேணிக்காத்தோமானால் அங்கு கல்வி தலை சிறந்து நிற்கும். அதற்கு உதாரணமாக இந்த முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சிறந்து விளங்குகின்றது.

50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபர் இடம் தானமாக வழங்கி இன்று பொன் விழா நடக்கின்ற வகையில் சிறந்து விளங்குவதற்கு இப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் மிகுந்த பங்கு உண்டாகும். இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தாலும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு தொடந்து பங்காற்றி வருகிறார்கள் என்பது பெருமைக்குரிய விசயமாகும். அதேபோல் மேலும் இந்த பள்ளி சிறந்து விளங்க தமிழக அரசு தேவையான உதவிகளை வழங்கிடும்.

மேலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) பயிற்சி வகுப்புகள் அரசே நடத்த திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முலம் கிராமபுறத்தில் படித்த மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு தேடிச் சென்று 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தி படிப்பதை முற்றிலும் தவிர்ப்பதனால் தாங்கள் சொந்த மாவட்டங்களிலே கட்டணமின்றி படிப்பதற்கான வசதிகளை அரசே மேற்கொண்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, இன்று உலகளவில் உள்ள கல்விக்கு நிகராக தரம் உயர்ந்து சிறந்து விளங்கி கொண்டிருக்கின்றன. மேலும் புதிய வகை பாடத்திட்டங்களும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது மேலும் மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் மற்றும் ரூ.10 ஆயிரம் பணமுடிப்பும் வழங்கிடவும் அதே போல் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டில் கலை அறிவியல் கல்வி பயிற்சி பெற ஏதுவாக அதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடும் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் நோக்கம் மாணவ, மாணவியர்கள் சிறந்த கல்வியாளர்களாக உருவாக வேண்டும் என்பதாகும்.

மேலும், தற்பொழுது புதிய வகை பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 2 ஆண்டுகள் கல்வி பெற்றவுடன் அதற்கேற்ப சரியான வேலைவாய்ப்பு கிடைத்துவிடும். அந்த வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர் சமுதாயம் இனி வருங்காலங்களில் அச்சப்படத்தேவையில்லை. ஒவ்வொரு தேர்வையும் எளிதாக சந்திக்கலாம். அந்த அளவிற்கு புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்கப்பட்டு, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டும் விதமாக புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மூன்று வகை சீருடைகள் வடிவமைக்கப்பட்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு மாதிரியும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை, 10 முதல் 12-ம் வகுப்பு வரை ஒருவகையான என மூன்று வகை சீருடைகள் வழங்கப்படவுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் 2016- 2017ம் ஆண்டில் அரசு பொது தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசும், மற்றும் பாராட்டுச் சான்றுகளையும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி , முன்னாள் அமைச்சர் ராமசாமி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நரேந்திரன், ஆசிரியர் சரவணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com