

தஞ்சாவூர்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததால் விவசாயிகள் மாடுகளை விற்க சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 6-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற முடியாத நிலை உள்ளது. டெல்டா பகுதியான தஞ்சை பஞ்ச பிரதேசமாக மாறிவிட்டது. போதிய மழை பெய்யாமல் இயற்கை வஞ்சித்து விட்ட நிலையில் கர்நாடகா அரசும் காவிரி நீரை தர மறுக்கிறது. கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்டுவதற்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மாநில அரசுதான் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார். ஆந்திர அரசும் பாலம் கட்டுவதாக கூறிவிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில் அணை கட்டி வருகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது நான் ஆஜராகி வாதாடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.