

திண்டுக்கல்:
2 ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதுகுறித்து திண்டுக்கல்லில் தி.மு.க மாநில துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது,
இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். தி.மு.க தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்ககூடிய தீர்ப்பாகும்.
தி.மு.க தலைவர் கலைஞர், செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு போராட்டங்களை சந்தித்து அரசியல் களத்தில் வெற்றிபெற்றுள்ளனர். அதேபோல் தற்போது முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் மீது பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதன்மூலம் தி.மு.கவை அழித்துவிடலாம் என சிலர் சதி செய்தனர். அவர்களுக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் மக்கள்விரோத ஆட்சி நடந்து வருகிறது.
பணத்தால் மயக்க நினைத்தவர்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்ககூடும். வெகுவிரையில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று மறுமலர்ச்சி ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.