

திருவாரூர்:
கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் நீட் தேர்்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நோய் தொற்று பரவும் சூழலில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூட வேண்டி இருக்கிறது. மேலும் சமூக நீதிக்கு எதிராக நீட் தேர்வு அமைந்துள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி திருவாரூர் தலைமை தபால் நிலையத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் முஜிபுர்ரகுமான் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் குத்புதீன், நவாஸ், நகர தலைவர் ஹாஜா நஜ்புதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.