குன்றத்தூர், சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி சரளா (40). இவர்களது மகன் தஷ்வந்த்.
கடந்த 2-ந் தேதி செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தஷ்வந்த், பெற்ற தாய் என்றும் பாராமல் சரளாவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். பின்னர் தாய் அணிந்திருந்த 25 பவுன் நகை, வீட்டில் இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கத்துடன் தஷ்வந்த் தப்பி சென்றுவிட்டார்.
ஏற்கனவே தஷ்வந்த், கடந்த பிப்ரவரி மாதம் மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்து உடலை எரித்து இருந்தார்.
இந்த வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்த தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் அவர் தாய் சரளாவை படுகொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கொலைகாரன் தஷ்வந்தை பிடிக்க உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சார்லஸ், கிருஷ்ணகுமார், சங்கர், நாராயணன், சப்- இன்ஸ்பெக்டர் பொற்பாதம் ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைமறைவாக இருந்த தஷ்வந்தை பிடிப்பது முதலில் போலீசுக்கு பெரும் சவாலாக இருந்தது. அவரைப் பற்றிய எந்த தகவலும் முதலில் கிடைக்காததால் எங்கு சென்றார் என்று போலீசார் குழப்பத்தில் இருந்தனர்.
இதையடுத்து தஷ்வந்த் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவருடன் நெருங்கி பழகிய குற்றவாளிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது விபச்சார வழக்கில் சிறையில் இருந்த செங்குன்றத்தை சேர்ந்த ஒருவருடன் தஷ்வந்த் வெளியில் வந்தபோது கடைசியாக பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விபச்சார புரோக்கரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதில் தஷ்வந்த் பெங்களூர் சென்று இருப்பதும், அங்கிருந்து விபச்சார அழகியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் மும்பைக்கு சென்று இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் செம்பூர் பகுதியில் தஷ்வந்த் தங்கி இருந்தது தெரிந்தது. அவனைப் பற்றிய விபரத்தை அங்கிருந்த தமிழர்களிடம் தனிப்படை போலீசார் தெரிவித்து கைது செய்ய உதவி செய்யுமாறு கேட்டனர்.
மேலும் தஷ்வந்தின் புகைப்படத்தையும் வாட்ஸ் அப்களில் பரவ விட்டனர். இதற்கு போலீசார் எதிர்பார்த்த பலன் கிடைத்தது.
நேற்று காலை செம்யூர் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் இருக்கும் ரேஸ்கோர்சில் தஷ்வந்த் இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ரேஸ்கோர்சின் ஒரு பகுதியில் தஷ்வந்த் ‘ஹாயாக’ டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.
தாடியுடன் தஷ்வந்த் இருந்ததால் முதலில் போலீசுக்கு குழப்பம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்திருப்பதை அறிந்த தஷ்வந்த் தப்பி ஓடினார். உஷாரான தனிப்படையினர் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
நேற்று இரவே தஷ்வந்தை சென்னை கொண்டு வர போலீசார் முடிவு செய்து இருந்தனர். ஆனால் மும்பை போலீசாரின் நெருக்கடி காரணமாக இன்று காலை தஷ்வந்தை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.
பின்னர் இன்று இரவு விமானம் மூலம் தஷ்வந்தை சென்னை கொண்டு வருகிறார்கள். இங்கு அவரிடம் போலீசார் நடத்தும் விசாரணைக்கு பின்னரே கொலைக்கு யாரேனும் உதவினார்களா? தப்பி செல்ல உதவியது யார்? என்பது குறித்த விபரம் தெரியவரும்.
சென்னையில் இருந்து தப்பிய தஷ்வந்த் முதலில் பெங்களூரில் விபசார அழகியுடன் தங்கி இருந்தார். அப்போது அங்குள்ள மற்றொரு விபசார அழகியின் ஏற்பாட்டில் மும்பைக்கு சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கைதான தஷ்வந்த் தாயை கொன்ற குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் ஜாலியாக இருந்துள்ளார். போலீசாரிடமும் இதுபற்றி எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.
தஷ்வந்த் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும் நேற்று இரவு குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏராளமான பொது மக்கள் திரண்டனர். அவனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஆவேசமாக கோஷமிட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
முன்பு சிறுமியை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தை போலீசார் கைது செய்தபோது அவரை பொது மக்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.
எனவே இந்த முறையும் தஷ்வந்த் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனை தடுக்க தஷ்வந்தை போலீசார் அழைத்து வரும் போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக விபச்சார புரோக்கர் ராஜ்குமார் உள்பட 3 பேர் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.