

சென்னை:
தனியார் பால் கலப்படம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதிததற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வரவேற்றுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி கூறியதாவது:-
தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக அடிப்படை ஆதாரம் இல்லாமல் துறை அமைச்சரே பேசுவ ஏற்க கூடியதல்ல. பாலில் கலப்படம் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. பால் நிறுவனத்தை மூடி ‘சீல்’ வைக்கலாம். அத்தியாவசிய பொருளான பாலை ஒவ்வொரு நிமிடமும் மக்கள்அருந்தி கொண்டே இருக்கிறார்கள். ஒரு பால் நிறுவனத்தின் பாலில் கலப்படம் இருப்பதாக பெயரளவில் சொல்லக் கூடாது.
அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசிய அமைச்சரின் பேச்சுக்கு ஐகோர்ட்டு வாய்பூட்டு போட்டு இருப்பது வரவேற்க கூடியது.
இந்த பிரச்சினைக்கு பிறகாவது முதல்-அமைச்சர் கால தாமதம் செய்யாமல் சட்டசபையில் பால் கலப்பட சிறப்பு தடை சட்டத்தை அவசரமாக கொண்டு வர வேண்டும். தனியார், அரசு பால் என்று பாராமல் ஆய்வு செய்ய வேண்டும். பாலை பாக்கெட்டில் அடைப்பதற்கு முன்னதாக பால் நிறுவனத்திற்கே சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் தவறை கண்டுபிடிக்க முடியும்.
இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.