விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் புதிய விதிகள் தயார்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் புதிய விதிகள் தயார் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் புதிய விதிகள் தயார்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
Published on

சென்னை:

‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடை தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தி.நகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

தீ விபத்துக்குள்ளான ‘சென்னை சில்க்ஸ்’ கட்டிடத்தின் மூன்று தளங்கள் ஐகோர்ட்டு உத்தரவின்படி இடிக்கப்பட்டன. ஆனால் சிறிது காலத்தில் எந்த வித அனுமதியும் பெறாமல் அந்த தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன.

தி.நகர் பகுதியில் விதி மீறல் கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், அதிகாரிகள் விதிமீறல் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டுக்கு பின் தி.நகரில் அனுமதியின்றி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு பொறுப்பான வீட்டுவசதி துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் டிராபிக் ராமசாமி கூறியிருந்தார்.

மேலும், ‘2007ம் ஆண்டுக்கு பின்னர் எத்தனை கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அறிக்கை அளிக்கவும், விதி மீறல் கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2007-ம் ஆண்டுக்கு முன் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை படுத்துவது தொடர்பான புதிய விதிகள் தயாராக உள்ளது எனவும், அந்த விதிகள் நான்கு வாரத்தில் வெளியிடப்படும். விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவின் கூட்டம் விரைவில் கூட உள்ளது. அதுவரை இவ்வழக்கை தள்ளிவைக்க வேண்டும்‘ என்று அரசு வக்கீல் கூறினார்.

இதனையடுத்து நீதிபதிகள், கட்டிட விதி மீறல்கள் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன, எனவே அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக தெரிவித்து, வழக்குகளின் விசாரணையை வரும் ஜூலை 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com