அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்?: ஐகோர்ட்டு கேள்வி

அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்?: ஐகோர்ட்டு கேள்வி
Published on

தமிழக அரசை அண்மை காலமாக நடிகர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஊழல்களால் அனுபவித்த இன்னல்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கவேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் வெளியாகி இருந்த அமைச்சர்களின் இ-மெயில் முகவரிகளை கமல்ஹாசன் வெளியிட்டார்.

இதையடுத்து அரசு இணைய தளத்தில் இருந்த அந்த விவரங்கள் காணாமல் போனது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து தமிழக அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் மற்றும் வீட்டு முகவரிகள் திடீரென கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி முதல் நீக்கப்பட்டுள்ளன.

அரசின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர்களை தொடர்பு கொள்ளவும் முக்கிய தகவல்களமாக உள்ள அரசு இணையதளத்தில் எவ்வித காரணமுமின்றி அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் மற்றும் முகவரிகளை நீக்கியிருப்பது சட்டவிரோதமானது.

இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், அரசின் வெளிப்படைத் தன்மைக்கும் எதிராக உள்ளது. எனவே, அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘அமைச்சர்களின் தொலைபேசி எண், இ-மெயில் உள்ளிட்ட விவரங்களை எந்த அடிப்படையில் மனுதாரர் கேட்கிறார்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த விவரங் களை எல்லாம் அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்’ என்று பதிலளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com