மரண வாக்குமூல அறிக்கையை போலீசுக்கு நேரடியாக வழங்கினால் என்ன?: ஐகோர்ட்டு கேள்வி

விசாரணை காலதாமதத்தை தடுக்க மரண வாக்குமூல அறிக்கையை போலீசுக்கு நேரடியாக வழங்கினால் என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
மரண வாக்குமூல அறிக்கையை போலீசுக்கு நேரடியாக வழங்கினால் என்ன?: ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை, ஆக. 2-

திருப்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்தின் நிர்வாகி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதில், ஆசிரமத்தில் தங்கியிருந்த தன்னை 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிர்வாகி கற்பழித்து விட்டதாக கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்வாகியை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நிர்வாகி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாஜிஸ்திரேட்டிடம் பாதிக்கப்பட்ட பெண் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 164-ன் கீழ் கொடுத்த வாக்கு மூலம் ஆவணங்களை கேட்டார்.

அப்போது வாக்குமூல அறிக்கையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு இன்னும் தரவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ரமேஷ், ‘மரணவாக்குமூலம், ரகசிய வாக்குமூலம் உள்ளிட்டவைகளை பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மாஜிஸ்திரேட்டு தான் பெறுகின்றனர்.

இந்த வாக்குமூலத்தை அவர்கள் தயாரித்து, தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்புகின்றனர். தலைமை மாஜிஸ்திரேட்டு, அந்த வழக்கை விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அதன் பின்னர் தான் அந்த வாக்கு மூலம் போலீஸ் தரப்புக்கு கிடைக்கிறது. இந்த நடைமுறை காலதாமதத்தினால், வழக்கின் விசாரணை பாதிக்கப்படத்தான் செய்கிறது’ என்று கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிரகாஷ், ‘ஜாமீன் கேட்டு நிர்வாகி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், மரண வாக்குமூலம், ரகசிய வாக்கு மூலம் ஆகியவை போலீஸ் தரப்புக்கு செல்ல ஏற்படும் காலதாமதம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும். இந்த வழக்கை டிவிசன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜிக்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தார். பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிபிரகாஷ் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

அப்போது மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ராஜரத்தினம், வக்கீல் ரமேஷ், அபுடுகுமார் உட்பட பல வக்கீல்கள் ஆஜராகி, வாக்குமூலம் ஆவணங்கள் கிடைக்கும் காலதாமதம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வாதிட்டனர்.

அப்போது, ‘மரண வாக்கு மூலம், ரகசிய வாக்குமூலங்களை பதிவு செய்யும் ஒரு மாஜிஸ்திரேட்டு, அந்த அறிக்கையை தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பி வைக்கும்போது, அவற்றின் நகலை விசாரணை அதிகாரியான போலீஸ் அதிகாரிக்கு ஏன் அனுப்பி வைக்கக்கூடாது? இதனால் வழக்கின் புலன் விசாரணைக்கு தேவையில்லாத ஏற்படும் காலதாமதத்தை தடுக்கலாமே?’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com