அத்திவரதர் சிலை உள்ள குளத்தை சுத்தமாக பராமரிக்க என்ன நடவடிக்கை? - ஐகோர்ட்டு கேள்வி

அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை எதிர்காலத்தில் சுத்தமாக பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், அசோகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிலை வெளியில் உள்ளதால், அது வைக்கப்பட்டிருந்த அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வாரி சுத்தம் செய்ய அரசுக்கு உத்தரவிடவேண்டும். இல்லையென்றால், குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய இன்னும் 40 ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டியது வரும்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அனந்தசரஸ் குளத்தில் அனைத்து கழிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டு, முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, அனந்தசரஸ் குளம் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு அரசு பிளடர் எம்.மகாராஜா, அரசு சிறப்பு பிளடர் எம்.கார்த்திக்கேயன் ஆகியோருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அரசு பிளடர்கள் இருவரும் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

அத்திவரதர் சயனகோலத்தில் 40 ஆண்டுகள் ஓய்வு எடுக்கும் புனிதமான இடமாக இந்த அனந்தசரஸ் குளம் கருதப்படுகிறது. இந்த குளத்தில் அத்திவரதர் மண்டபத்தின் கீழ் 24 அடி ஆழத்தில் சிலை வைக்கப்படும். சிலையை உள்ளே வைத்து பாம்பு தலையை போன்ற கற்களை கொண்டு பூட்டு போடப்பட்டுள்ளது.

மழை நீர் தான் இந்த குளத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. குளத்துக்குள் வற்றாத ஊற்று உள்ளது. கடுமையான வறட்சி காலங்களிலும் இந்த குளத்தின் தண்ணீர் வற்றாது. இந்த குளத்தை யாரும் பயன்படுத்த முடியாது. குளத்துக்குள் யாரும் செல்லக்கூடாது. இந்த குளத்தை சுத்தம் செய்ய நவீன தொழில்நுட்பத்தை இதுவரை கையாண்டது கிடையாது. இயற்கையாகவே அந்த குளத்தில் மீன்கள் உள்ளன. உயிரினங்கள் அந்த குளத்தை சுத்தமாக பராமரித்து வருகின்றன.

இந்த குளத்தில் ஏகாந்த கோலத்தில் சாமி சிலை இருப்பதாக நம்பப்படுவதால், அங்கு நவீன தொழில்நுட்பத்தை ஏதாவது பயன்படுத்தினால், தேவையில்லா ஒலி மாசு ஏற்படும். அது சாமி சிலையை பாதிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு பக்தர்களின் காணிக்கை மூலம் கோவிலுக்கு ரூ.6 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த தொகை கோவில் மற்றும் அனந்தசரஸ் குளத்தை பராமரிக்க செலவிடப்படும்.

எனவே, குளம் இயற்கையாக சுத்தமாகி விடுவதால், அதை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்ய தேவையில்லை. சிலையை எடுக்கும்போதும், வைக்கும்போதும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள தண்ணீர், மீன் உள்ளிட்ட உயிரினங்களை அருகில் உள்ள பொற்றாமரை குளத்துக்கு மாற்றப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, ‘அனந்தசரஸ் குளம் குறித்து ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையில், குளத்தில் இருந்து சகதி, பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் அகற்றப்பட்டதாக ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது.

எனவே, எதிர்காலத்திலும் குளத்தை சுத்தமாக பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது குறித்து விரிவான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com